Sunday, October 31, 2010

வீடியோகேம்

மழைநீரில்
மிதந்து செல்லும்
காகிதக் கப்பல்களின்
அலைவுகளில்,
லயிக்கின்ற நொடிகளை 
அறிமுகப்படுத்துகிறேன்...
வீடியோ கேமில்
வசமிழந்த மகனிடம்,
சுவாரசியமில்லாத 
விளையாட்டாய் 
ரசமிழந்து நிற்கின்றன...
அலைவுகள்.     
காலைச்  செய்தி

எனது வாசிப்பு...
வரிகளில் தொடங்கி,
வார்த்தைகளில் புதைந்து
உறைந்து கிடந்த உண்மையைத் தேடி
அதனுள் பின்னப்பட்ட சதிகளை விடுத்து
உள்ளே, உள்ளே சென்று
ஊடுருவியப் பின்,
மீண்டும் வாசிக்கிறேன்
மேலோட்டமாக...
செய்தி மறைகிறது 
பல செய்திகளை மறைத்தபடி 
படபடக்கிறது 
செய்திதாள் !

Saturday, October 16, 2010

வரவேற்பறை


என் சிறுவயது
புகைப்படம்
வரவேற்கும் வரவேற்பறையில்,
சிறு குழந்தையாய்
கூடை நாற்காலியில்
சுருண்ட முடியுடன்
பொக்கைவாய் சிரிப்புடன்...

வீடுகள் மாறின
அப்பாவின் பணியிட மாறுதலுடன்
வரும் விருந்தினர்களை
வரவேற்கும்
புகைப்படம்,
மூத்தமகளென்ற  அறிமுகமும்
பெருமைகளும்...

இன்று...
வரவேற்கின்றன...
சகோதரர்களின் படங்களும்
பெருமைகளும்,
வரவேற்பறை மட்டுமல்ல
வீடு முழுவதும் தேடுகிறேன்...
எனது இருப்பை
தொலைத்திருந்தது
பிறந்த வீடு.

Monday, October 11, 2010

அசைவுகள்

அன்பின் 
அசைவுகள்...
மென்மையானவை 
கண்களில்
கலங்கும் கண்ணீரைப் போல
கைகளை
வருடும் நேசத்தைப் போல
தூரத்தில்
கசியும்  இசையைப் போல
காற்றில்
அசையும் இலையைப் போல
உருவமில்லா
அருவமாய் உள்நுழையும்
உயிரை அணைத்து 
நிரப்பிச் செல்லும்.  

Friday, October 8, 2010

உலகம் உருண்டை

ஒரு சுற்று
வந்துவிட்டேன்...
ஆழமாய் உற்று நோக்குகிறேன்
முடிவினில்,
அந்நியனாய் தெரிகிறாய்...
அறிமுகமான வேளையின்
பரிச்சயமான நேசத்தையும்
தொலைத்தவனாய்.

Tuesday, October 5, 2010

இயற்கை

பனித்துளி
கடல்வெளி
அலைநுரை
கரைதொடும்அலைகள்
அகண்ட வானம் 
செஞ்சூரியன் 
முழுநிலவு 
சிலீரிடும் தென்றல்
மலைமுகடு
பஞ்சுப்பொதியாய் மேகம்
இளவேனில் 
மாலைக்காற்று 
மழைமேகம்
பசும்போர்வையாய் புல்வெளி 
காற்றில் அசையும் நாற்று 
கலகலக்கும் தென்னை 
சலசலக்கும் ஓடை 
குளிரும் மார்கழி
அதிகாலை
பறவைகளின் மொழி
...
உனது அன்பு.

Saturday, October 2, 2010

துகிலுரிப்பு

மிருகங்கள் சூழ்ந்திருந்தன,
கண்களில்...
காலம் காலமாய்
ஏற்றிய போதையுடன் 
உதடுகளில் 
அருவருப்பான கேலியுடன் 
இரையை உறுமலுடன்... 

அவள் ஆடையை உருவி  
கண்களால் ருசித்தன...
திரண்ட அவளழகை
கழிகள் பதம் பார்த்தன
அவளது கதறல்...
காதுகளை கிழித்தது
கண்ணன் சேலைத் தரவில்லை
துகிலுரிப்பவர்கள்...
தர்மராஜாக்கள்  என்பதால்
கதறுவது...
சேரிப்  பெண்கள் என்பதால்.

Monday, September 27, 2010

பொசுக்கும் கண்கள்...

எனக்குள்
நடுக்கமாய் இறங்குகிறது,
உனது பார்வை...

விழுங்கும் விழிகளில்
அகப்பட்ட மனது
தடதடக்கும்...

உயிர் முழுதும்
கண்களில் தேக்கும்
உனது செய்கை
அதிர வைக்கும்...

உன் பார்வையின்
வீரியத்தை
தாங்க முடியாமல்
திணறுகிறேன்...

என் மென்மையை...
பொசுக்கும்
பார்வையோடு
அலைகிறாய் நீ.
Forwarded Message

யாருக்கோ யாரோ
அனுப்பிய மின்தகவல்
கைபேசிகளை கடந்தபின்...
 என்னை அடைந்தது.

உனது மனதின் 
வெளிப்படாய்...
உள்வாங்கினேன்...

விலாசமின்றி
காற்றில் அலையும்
மின்தகவல்களாய்
அலைகின்றன...
என்னுள் நீ
எழுப்பிய அதிர்வுகள்.

Sunday, September 26, 2010

நிறுத்தம் .

உன்னை உற்றுப்பார்க்கிறேன்...
உள்ளுக்குள் பதியவைக்கும்
முயற்சியாய்,
நாளை பயணத்தின்
தொடர்ச்சி இருந்தவரை
இறங்கும் நொடி வரை...
உரையாடி பயணித்து இருக்கிறோம்,

இன்றோ...
ஒவ்வொரு  நிறுத்தமும்
பதிவு செய்கிறது
பிரிவின் விளிம்பை...
நிறுத்தத்தில்
இறங்கி நடக்கிறேன்
உன்னை சுமந்தபடி.    

Saturday, September 25, 2010

முகமூடி

எதற்காக
பிரயத்தனப்படுகிறாய் ?
முகமூடிகளை
அணிந்துகொண்டு
வெளிப்படும்போதேல்லாம்..
சொல்லிவிட
நினைப்பதுண்டு,
இயல்பாய் எதிர்கொள்வதைவிட
ஆயிரம் மடங்கு
வெளிப்பாடுகள் தெறிக்கின்றன
முகமெங்கும்...
தயவுசெய்து
முகமூடியை  களைந்துவிடு.     
     

Friday, September 24, 2010

வண்ணத்துப்பூச்சி

காட்டுச் செடிகளின்
பூக்களின் மீது உட்கார்ந்து
போக்கு காட்டுகிறது...
பிடிக்கும் விழைவில்
ஒவ்வொரு செடியாய்
செலுத்தப்படுகிறேன்...
அழகிய இறக்கைகளை 
படபடத்தப்படி 
தொடர்கிறது உனது பயணம்...
மொத்த அன்பையும் 
சுமந்து கொண்டு 
பின்னால் அலைகிறது 
மனது.
  

நல்வரவு...

எழுத வேண்டும்...
மனதின் அசைவுகளை
இசைக்கும் விதத்தில்,
உணர்வுகளின்
உயிரோட்டங்களை
எழுப்பும் விதத்தில்,
வீணான வார்த்தைகளை
மௌனத்தில் ஆழ்த்தும் விதத்தில்
ஆசைகளை...
நனவில் நிகழ்த்தும் விதத்தில்
கனவுகளை...
கண்களில் காணும் விதத்தில்
அழுகைகளை...
ஆழமாய் உணரும் விதத்தில்
முரண்பாடுகளை...
முழுமையாய் பகிரும் விதத்தில்
அன்பை...
அரவணைப்பாய் அறியும் விதத்தில்
இலட்சியங்களை...
காலுக்கடியில் அடங்கும் விதத்தில்
நீண்ட பயணத்தில்,
தொடரும் துணையாய்
என்றும் எழுத வேண்டும்.