Monday, June 30, 2014

கண்ணாடி பிம்பங்கள்

 
 
காலத்தின் கண்ணாடி
உடைந்தது கீறல்களாய்...
ஒவ்வொருத் துண்டிலும்
வேவ்வேறு உருவுடன்.

கண்மூடி...
உள்ளிருக்கும் உருவமுடன்
ஒப்பு நோக்கினேன்....

மாயபிம்பமாய் கலைகிறாய்...
கண்ணாடி உருவங்கள்
பரிகசிக்கின்றன.

Sunday, June 29, 2014

இரட்டை நாயனம்

உருவம் மட்டுமே
உன்னுடையாதாக,
அன்னியனாய் தெரிகிறாய்
அத்தனைப் பிரயத்தனப்பட்டும்,
உன்னைப் பார்க்க இயலவில்லை.

வெளிப்பாடுகளில்...
அன்பை பொழிகிறாய்,
யதார்த்தமாக இருப்பதாக
காட்டிக் கொள்கிறாய்,...
உனது மொழியை
உன் முத்திரையோடு
உரையாட எத்தனிக்கிறாய்...

இரட்டை நாயனமாய்
சிக்கித் தவிக்கிறது....
இயல்பறுந்த நீயும்
நீயின்றி இருக்குமுன் நிலையும்.

Saturday, June 28, 2014

ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு

சிலீரென்று  தொடுகிறாய்...
உயிரற்ற உடலை தொடுவது
போலிருந்தது...
அன்பின்றி உணர்ச்சியற்ற
தொடுதலை உணர்ந்த
தருணமது.

உனது மனதைப்போல
வன்முறையாய்
இயந்திரமாய் நகர்கிறாய்...
இருண்ட வாழ்கையின்
வலி உள்ளிறங்கியது
உணர்வுகள் மரித்தன.

வெளியில் நிகழும்
எதுவும் உள்நுழையவில்லை
நழுவினேன்...
அணுவளவும் தொடர்பற்றவளாய்

அழகான புல்வெளி விரிந்திருந்தது...
அமைதியான மனவெளியில்,
பஞ்சுப்பொதியாய்
மேகங்கள் தாங்கி நின்றன.

வானவில் விரியும்... 
வான்வெளியில் பறந்து
செல்கிறேன்...
ஆக்கிரமிப்பிலிருந்து
விடுபட்டவளாய்.


Friday, June 27, 2014

பூக்ள்

பூக்கள் வசீகரிப்பதுபோல்
பயணங்களில் தென்படும்
குழந்தைகளின் இருப்பு.

கைகள் தானாக
நீள்கின்றன...
ஏந்திக் கொள்ள
உலகம் அறியா
அவர்களது உலகத்துள்...
மனம் குழைகிறது.

கைகாட்டி விடைப்பெறுகிறது
குழந்தை
கிளர்ந்தெழுகிறது...
அப்பிஞ்சுக்  கைகளை
பிடித்துக் கொண்டு
செல்லவேண்டுமென்ற ஆசை.