Sunday, October 31, 2010

வீடியோகேம்

மழைநீரில்
மிதந்து செல்லும்
காகிதக் கப்பல்களின்
அலைவுகளில்,
லயிக்கின்ற நொடிகளை 
அறிமுகப்படுத்துகிறேன்...
வீடியோ கேமில்
வசமிழந்த மகனிடம்,
சுவாரசியமில்லாத 
விளையாட்டாய் 
ரசமிழந்து நிற்கின்றன...
அலைவுகள்.     
காலைச்  செய்தி

எனது வாசிப்பு...
வரிகளில் தொடங்கி,
வார்த்தைகளில் புதைந்து
உறைந்து கிடந்த உண்மையைத் தேடி
அதனுள் பின்னப்பட்ட சதிகளை விடுத்து
உள்ளே, உள்ளே சென்று
ஊடுருவியப் பின்,
மீண்டும் வாசிக்கிறேன்
மேலோட்டமாக...
செய்தி மறைகிறது 
பல செய்திகளை மறைத்தபடி 
படபடக்கிறது 
செய்திதாள் !

Saturday, October 16, 2010

வரவேற்பறை


என் சிறுவயது
புகைப்படம்
வரவேற்கும் வரவேற்பறையில்,
சிறு குழந்தையாய்
கூடை நாற்காலியில்
சுருண்ட முடியுடன்
பொக்கைவாய் சிரிப்புடன்...

வீடுகள் மாறின
அப்பாவின் பணியிட மாறுதலுடன்
வரும் விருந்தினர்களை
வரவேற்கும்
புகைப்படம்,
மூத்தமகளென்ற  அறிமுகமும்
பெருமைகளும்...

இன்று...
வரவேற்கின்றன...
சகோதரர்களின் படங்களும்
பெருமைகளும்,
வரவேற்பறை மட்டுமல்ல
வீடு முழுவதும் தேடுகிறேன்...
எனது இருப்பை
தொலைத்திருந்தது
பிறந்த வீடு.

Monday, October 11, 2010

அசைவுகள்

அன்பின் 
அசைவுகள்...
மென்மையானவை 
கண்களில்
கலங்கும் கண்ணீரைப் போல
கைகளை
வருடும் நேசத்தைப் போல
தூரத்தில்
கசியும்  இசையைப் போல
காற்றில்
அசையும் இலையைப் போல
உருவமில்லா
அருவமாய் உள்நுழையும்
உயிரை அணைத்து 
நிரப்பிச் செல்லும்.  

Friday, October 8, 2010

உலகம் உருண்டை

ஒரு சுற்று
வந்துவிட்டேன்...
ஆழமாய் உற்று நோக்குகிறேன்
முடிவினில்,
அந்நியனாய் தெரிகிறாய்...
அறிமுகமான வேளையின்
பரிச்சயமான நேசத்தையும்
தொலைத்தவனாய்.

Tuesday, October 5, 2010

இயற்கை

பனித்துளி
கடல்வெளி
அலைநுரை
கரைதொடும்அலைகள்
அகண்ட வானம் 
செஞ்சூரியன் 
முழுநிலவு 
சிலீரிடும் தென்றல்
மலைமுகடு
பஞ்சுப்பொதியாய் மேகம்
இளவேனில் 
மாலைக்காற்று 
மழைமேகம்
பசும்போர்வையாய் புல்வெளி 
காற்றில் அசையும் நாற்று 
கலகலக்கும் தென்னை 
சலசலக்கும் ஓடை 
குளிரும் மார்கழி
அதிகாலை
பறவைகளின் மொழி
...
உனது அன்பு.

Saturday, October 2, 2010

துகிலுரிப்பு

மிருகங்கள் சூழ்ந்திருந்தன,
கண்களில்...
காலம் காலமாய்
ஏற்றிய போதையுடன் 
உதடுகளில் 
அருவருப்பான கேலியுடன் 
இரையை உறுமலுடன்... 

அவள் ஆடையை உருவி  
கண்களால் ருசித்தன...
திரண்ட அவளழகை
கழிகள் பதம் பார்த்தன
அவளது கதறல்...
காதுகளை கிழித்தது
கண்ணன் சேலைத் தரவில்லை
துகிலுரிப்பவர்கள்...
தர்மராஜாக்கள்  என்பதால்
கதறுவது...
சேரிப்  பெண்கள் என்பதால்.