Sunday, August 26, 2012

இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்கள்! -"நவீன மனுதர்மம்."
 
 
" ....when i was in school I knew nothing about caste system. i believed that all are equal. But when i grew up and was trying to secure admissin to a college, i found that a friend got admission in a prestigious institution without much effort. when i asked him, how it become possible, he said " thanks to reservation , i get admission easily." Only then did the reality of the caste system sink in." ----- voice of an upper caste from yesterday's HINDU's Letter to editor.
 
 
இது தான் பெரும்பான்மையானவர்கள்,"இடஒதுக்கீட்டிற்கு"எதிராக வைக்கும் வாதம். இந்த குரலில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர விரும்புகிறேன்.
" பள்ளியில் படிக்கும் போது தனக்கு, சாதி அமைப்பை பற்றி ஒன்றும் தெரியாது என்றும் சமூகத்தில் எல்லோரும் சமமாக இருப்பதாக தான் நம்பிக்கொண்டிருந்ததாகவும் (?), கல்லூரி படிப்பிற்கு தகுதி தேர்வு நடைபெறும்போது தான்,இந்த சாதியை பற்றி தெரிய வந்ததாகவும், அதுவும் ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட மாணவன் தகுதியில் குறைவாக இருந்தும் இடஒதுக்கீட்டில் எளிதாக "சீட்" கிடைத்துவிட்டதாக அறிந்த போது தான் சாதி அமைப்பு பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டதாக" குறிப்பிட்டுள்ளார்.
 
 
பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் வரை... சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களை இந்த சமூகம் நடத்தும் விதம் குறித்து தெரியாவிட்டாலும், காந்தி, அம்பேத்கர், பூனா ஒப்பந்தம், இந்திய சமூகத்தின் ஏற்றதாழ்வுகள் குறித்து படித்திருப்பார்கலல்லவா? ஆனால் எந்த பாதிப்பும் இன்றி இவர்கள் வளர்கிறார்கள் அல்லது வளர்க்கப்படுகிறார்கள்.
இவர்களது வீட்டுக்கு உள்ளேயும், இவர்கள் வழிபடும் ஆலயங்களிலும் சாதி புரையோடிகிடக்கிறது, இவர்களுடன் படித்துக்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், இந்த நவீன காலத்திலும் எத்தனை ஒதுக்கப்பட்டு, மனிதன் என்ற அங்கீகாரம் இன்றி சமூகத்தில் தாழ்ந்த நிலையில் வைத்து, அவனது சுயமரியாதை இழிவு செய்யப்படுகிறது என்பதை அறிவார்களா ? அதை கண்டும் அதன் பாதிப்பு இவர்களுக்கு வருவதில்லை. ஏனெனில் இவர்கள் சமூகத்தில் உயர்ந்த சாதி, "அவனை தொடதே, வீட்டுக்கு அழைச்சுட்டு வராதேனு" அப்பா அம்மா சொல்வதை கேட்டு அதன் படியே வளர்ந்தவர்களுக்கு, அதில் ஒருவனது சுயம் அவமரியாதை செய்யப்படுகிறது எப்படி புரியும்?
 
எத்தனையோ தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களின் சாதீய மனப்பாங்கில் அடிபட்டு மேலெழுந்து வருகிறார்கள் என்பது தெரியாத அளவு சுயநலமாக உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மாணவன் ஒருவனுக்கு ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும் அளவுக்கு அவன் தகுதி பெற, இவர்களை விட பல மடங்கு உழைக்க வேண்டும். பலரது பெற்றோர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருப்பார்கள்.அதை விட அவனை சுற்றி அவன் திறமையை அவனது சாதியை கொண்டே குறைவாக மதிப்பிடும் சமூகம் அவனை இறுக்கும். பலருக்கு... எந்த வழிகாட்டிகளும் இருக்கமாட்டார்கள். ஒரு தாழ்த்தப்பட்டவன் கல்வியில் தன்னை நிரூப்பிக்க, உயர் சாதி மாணவனை விட பல மடங்கு உழைக்க வேண்டும். சாதியை வைத்து எடை போடும் ஆசிரியர்கள் அநேகம். சாதியினால் தாழ்த்தப்பட்ட மாணவர்களை வேண்டுமென்றே...மதிப்பெண்களை குறைத்து வழங்கும் உயர் கல்விநிறுவனங்கள் உண்டு. அதனால் தான் பள்ளியில் பொது தேர்வுகளில் அதிகம் மதிப்பெண்கள் பெரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கூட, இந்த உயர் கல்வி நிறுவனங்களில் சாதி வெறியர்களுக்கு பலியாகிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் சிறு வயதில் இருந்து பார்க்கவேண்டிய அவசியம் கூட இந்த உயர்ந்த சாதி என்று கூறிக்கொள்ளும் மாணவர்களுக்கு இல்லை. சுற்றி நடக்கும், சாதிப் பாகுபாடுகள் "அவர்களை" பாதிக்காத போது அது "சனதான தர்ம்மமாக" உள்ளது. பாதிக்கும் போது, அதுவும் அது பாதிப்பு அல்ல, சமூக தர்மம் ... பங்கீடு, சம உரிமை... அது தான் இட ஒதுக்கீடு. ஆனால் இவர்களுக்கு... தனக்கு கிடைக்கவேண்டிய "சீட்" பறிபோவதாக அர்த்தம். அப்போது தான் சாதீய சமுகம் தெரிகிறது. பாகுபாடு புரிகிறது, அதுவும் சாதியால்." தாங்கள் " பாதிப்படைந்ததாக கொதித்து எழுகிறார்கள்.
இந்த சமுதாயத்தின் கடைகோடியில் ஒருவனை நிறுத்திவைத்து, அவன் வாழ்வாதாரத்தை,சாதியின் பெயரால் அபகரித்துக்கொண்டவர்கள், இட ஒதுக்கீட்டின் மூலம் தனது இடத்தை "அவன்" பறித்துக்கொண்டான் என்று கை நீட்டுவது ???... எந்த வகையில் நியாயம்?
எப்படி எப்படி..." இடஒதுக்கேடு மூலம் எளிதாக இடம் கிடைத்துவிட்டதாக" அந்த தாழ்த்தப்பட்ட மாணவன் சொன்னான்னா? அவன் அந்த இடத்திற்கு வர எத்தனை கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என்று தெரியுமா? உங்களுக்கு படிக்க வேண்டியது மட்டும் தான் இருந்திருக்கும், அவனுக்கு பல தடைகள் இருந்திருக்கும். நண்பர்களே... அவர்களது "வலி" உங்களில் பலபேருக்கு புரியாது. ஏனெனில் தீண்டாமையும் , சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளும்... அவர்களது சுயத்தை சிதைக்கும் விஷயங்கள். அதை உணர மனித நேயம் வேண்டும்.
அவை " செய்தியாக" கூட உங்கள் உள்ளே செல்லாத போது... சமூக நீதி குறித்தும்,சாதியற்ற சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு ஒரு தடை என்றும் பேசுவது "நவீன மனுதர்மம்."