Friday, December 19, 2014

கண்ணிமைக்கும் நேரத்தில்...















நினைவுகளாய் நீண்டிருந்தவரை...
உணர்வுகளில் படர்ந்து
மெல்ல நகரும்
காலத்துடன்
அசைபோட்டபடி...
எழுத்துகளாய் உருக்கொண்டு 
கவிதையாய்
கொட்டிகொண்டிருந்தாய்.

அருகில் வந்த நிமிடத்திலிருந்து...  
மேலெழுந்து
பொங்கும் உணர்வுகளுடன்
நெஞ்சு முட்டும் மகிழ்ச்சியுடன்
கரைபுரளும் நிகழ்வுகளாய்
அழகான நொடிகள்...
அசுர வேகத்தில்
பறந்து செல்கின்றன
உன்னுடனான பொழுதுகள்...

நினைவுக் கூட்டில்
சேர்க்கவும் வழின்றி
கடந்து போயின
கண்ணிமைக்கும் நேரத்தில் !

Monday, June 30, 2014

கண்ணாடி பிம்பங்கள்

 
 
காலத்தின் கண்ணாடி
உடைந்தது கீறல்களாய்...
ஒவ்வொருத் துண்டிலும்
வேவ்வேறு உருவுடன்.

கண்மூடி...
உள்ளிருக்கும் உருவமுடன்
ஒப்பு நோக்கினேன்....

மாயபிம்பமாய் கலைகிறாய்...
கண்ணாடி உருவங்கள்
பரிகசிக்கின்றன.

Sunday, June 29, 2014

இரட்டை நாயனம்

உருவம் மட்டுமே
உன்னுடையாதாக,
அன்னியனாய் தெரிகிறாய்
அத்தனைப் பிரயத்தனப்பட்டும்,
உன்னைப் பார்க்க இயலவில்லை.

வெளிப்பாடுகளில்...
அன்பை பொழிகிறாய்,
யதார்த்தமாக இருப்பதாக
காட்டிக் கொள்கிறாய்,...
உனது மொழியை
உன் முத்திரையோடு
உரையாட எத்தனிக்கிறாய்...

இரட்டை நாயனமாய்
சிக்கித் தவிக்கிறது....
இயல்பறுந்த நீயும்
நீயின்றி இருக்குமுன் நிலையும்.

Saturday, June 28, 2014

ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு

சிலீரென்று  தொடுகிறாய்...
உயிரற்ற உடலை தொடுவது
போலிருந்தது...
அன்பின்றி உணர்ச்சியற்ற
தொடுதலை உணர்ந்த
தருணமது.

உனது மனதைப்போல
வன்முறையாய்
இயந்திரமாய் நகர்கிறாய்...
இருண்ட வாழ்கையின்
வலி உள்ளிறங்கியது
உணர்வுகள் மரித்தன.

வெளியில் நிகழும்
எதுவும் உள்நுழையவில்லை
நழுவினேன்...
அணுவளவும் தொடர்பற்றவளாய்

அழகான புல்வெளி விரிந்திருந்தது...
அமைதியான மனவெளியில்,
பஞ்சுப்பொதியாய்
மேகங்கள் தாங்கி நின்றன.

வானவில் விரியும்... 
வான்வெளியில் பறந்து
செல்கிறேன்...
ஆக்கிரமிப்பிலிருந்து
விடுபட்டவளாய்.


Friday, June 27, 2014

பூக்ள்

பூக்கள் வசீகரிப்பதுபோல்
பயணங்களில் தென்படும்
குழந்தைகளின் இருப்பு.

கைகள் தானாக
நீள்கின்றன...
ஏந்திக் கொள்ள
உலகம் அறியா
அவர்களது உலகத்துள்...
மனம் குழைகிறது.

கைகாட்டி விடைப்பெறுகிறது
குழந்தை
கிளர்ந்தெழுகிறது...
அப்பிஞ்சுக்  கைகளை
பிடித்துக் கொண்டு
செல்லவேண்டுமென்ற ஆசை.

Sunday, August 26, 2012

இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்கள்! -"நவீன மனுதர்மம்."
 
 
" ....when i was in school I knew nothing about caste system. i believed that all are equal. But when i grew up and was trying to secure admissin to a college, i found that a friend got admission in a prestigious institution without much effort. when i asked him, how it become possible, he said " thanks to reservation , i get admission easily." Only then did the reality of the caste system sink in." ----- voice of an upper caste from yesterday's HINDU's Letter to editor.
 
 
இது தான் பெரும்பான்மையானவர்கள்,"இடஒதுக்கீட்டிற்கு"எதிராக வைக்கும் வாதம். இந்த குரலில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர விரும்புகிறேன்.
" பள்ளியில் படிக்கும் போது தனக்கு, சாதி அமைப்பை பற்றி ஒன்றும் தெரியாது என்றும் சமூகத்தில் எல்லோரும் சமமாக இருப்பதாக தான் நம்பிக்கொண்டிருந்ததாகவும் (?), கல்லூரி படிப்பிற்கு தகுதி தேர்வு நடைபெறும்போது தான்,இந்த சாதியை பற்றி தெரிய வந்ததாகவும், அதுவும் ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட மாணவன் தகுதியில் குறைவாக இருந்தும் இடஒதுக்கீட்டில் எளிதாக "சீட்" கிடைத்துவிட்டதாக அறிந்த போது தான் சாதி அமைப்பு பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டதாக" குறிப்பிட்டுள்ளார்.
 
 
பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் வரை... சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களை இந்த சமூகம் நடத்தும் விதம் குறித்து தெரியாவிட்டாலும், காந்தி, அம்பேத்கர், பூனா ஒப்பந்தம், இந்திய சமூகத்தின் ஏற்றதாழ்வுகள் குறித்து படித்திருப்பார்கலல்லவா? ஆனால் எந்த பாதிப்பும் இன்றி இவர்கள் வளர்கிறார்கள் அல்லது வளர்க்கப்படுகிறார்கள்.
இவர்களது வீட்டுக்கு உள்ளேயும், இவர்கள் வழிபடும் ஆலயங்களிலும் சாதி புரையோடிகிடக்கிறது, இவர்களுடன் படித்துக்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், இந்த நவீன காலத்திலும் எத்தனை ஒதுக்கப்பட்டு, மனிதன் என்ற அங்கீகாரம் இன்றி சமூகத்தில் தாழ்ந்த நிலையில் வைத்து, அவனது சுயமரியாதை இழிவு செய்யப்படுகிறது என்பதை அறிவார்களா ? அதை கண்டும் அதன் பாதிப்பு இவர்களுக்கு வருவதில்லை. ஏனெனில் இவர்கள் சமூகத்தில் உயர்ந்த சாதி, "அவனை தொடதே, வீட்டுக்கு அழைச்சுட்டு வராதேனு" அப்பா அம்மா சொல்வதை கேட்டு அதன் படியே வளர்ந்தவர்களுக்கு, அதில் ஒருவனது சுயம் அவமரியாதை செய்யப்படுகிறது எப்படி புரியும்?
 
எத்தனையோ தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களின் சாதீய மனப்பாங்கில் அடிபட்டு மேலெழுந்து வருகிறார்கள் என்பது தெரியாத அளவு சுயநலமாக உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மாணவன் ஒருவனுக்கு ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும் அளவுக்கு அவன் தகுதி பெற, இவர்களை விட பல மடங்கு உழைக்க வேண்டும். பலரது பெற்றோர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருப்பார்கள்.அதை விட அவனை சுற்றி அவன் திறமையை அவனது சாதியை கொண்டே குறைவாக மதிப்பிடும் சமூகம் அவனை இறுக்கும். பலருக்கு... எந்த வழிகாட்டிகளும் இருக்கமாட்டார்கள். ஒரு தாழ்த்தப்பட்டவன் கல்வியில் தன்னை நிரூப்பிக்க, உயர் சாதி மாணவனை விட பல மடங்கு உழைக்க வேண்டும். சாதியை வைத்து எடை போடும் ஆசிரியர்கள் அநேகம். சாதியினால் தாழ்த்தப்பட்ட மாணவர்களை வேண்டுமென்றே...மதிப்பெண்களை குறைத்து வழங்கும் உயர் கல்விநிறுவனங்கள் உண்டு. அதனால் தான் பள்ளியில் பொது தேர்வுகளில் அதிகம் மதிப்பெண்கள் பெரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கூட, இந்த உயர் கல்வி நிறுவனங்களில் சாதி வெறியர்களுக்கு பலியாகிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் சிறு வயதில் இருந்து பார்க்கவேண்டிய அவசியம் கூட இந்த உயர்ந்த சாதி என்று கூறிக்கொள்ளும் மாணவர்களுக்கு இல்லை. சுற்றி நடக்கும், சாதிப் பாகுபாடுகள் "அவர்களை" பாதிக்காத போது அது "சனதான தர்ம்மமாக" உள்ளது. பாதிக்கும் போது, அதுவும் அது பாதிப்பு அல்ல, சமூக தர்மம் ... பங்கீடு, சம உரிமை... அது தான் இட ஒதுக்கீடு. ஆனால் இவர்களுக்கு... தனக்கு கிடைக்கவேண்டிய "சீட்" பறிபோவதாக அர்த்தம். அப்போது தான் சாதீய சமுகம் தெரிகிறது. பாகுபாடு புரிகிறது, அதுவும் சாதியால்." தாங்கள் " பாதிப்படைந்ததாக கொதித்து எழுகிறார்கள்.
இந்த சமுதாயத்தின் கடைகோடியில் ஒருவனை நிறுத்திவைத்து, அவன் வாழ்வாதாரத்தை,சாதியின் பெயரால் அபகரித்துக்கொண்டவர்கள், இட ஒதுக்கீட்டின் மூலம் தனது இடத்தை "அவன்" பறித்துக்கொண்டான் என்று கை நீட்டுவது ???... எந்த வகையில் நியாயம்?
எப்படி எப்படி..." இடஒதுக்கேடு மூலம் எளிதாக இடம் கிடைத்துவிட்டதாக" அந்த தாழ்த்தப்பட்ட மாணவன் சொன்னான்னா? அவன் அந்த இடத்திற்கு வர எத்தனை கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என்று தெரியுமா? உங்களுக்கு படிக்க வேண்டியது மட்டும் தான் இருந்திருக்கும், அவனுக்கு பல தடைகள் இருந்திருக்கும். நண்பர்களே... அவர்களது "வலி" உங்களில் பலபேருக்கு புரியாது. ஏனெனில் தீண்டாமையும் , சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளும்... அவர்களது சுயத்தை சிதைக்கும் விஷயங்கள். அதை உணர மனித நேயம் வேண்டும்.
அவை " செய்தியாக" கூட உங்கள் உள்ளே செல்லாத போது... சமூக நீதி குறித்தும்,சாதியற்ற சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு ஒரு தடை என்றும் பேசுவது "நவீன மனுதர்மம்."

Wednesday, May 9, 2012

ஏன் இந்த தற்கொலைகள் ..........?  

சமீபத்தில் அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த 2 தொடர்ச்சியான தற்கொலைகள் ஒரு அடித்தட்டு முன்றாம் வருடம் பயின்ற
மாணவனும், ஒரு முதல் வருட மாணவியும்.... ஒரே மாதத்தில் 2 தற்கொலைகள் , இரண்டிற்கும் காரணம் கிராமத்திலிருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து
நன்றாக படித்து 90 சதவீதத்துக்கும்
அதிகமான மதிப்பெண்கள் பெற்று  அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு பெற்றவர்கள்.
தற்கொலை... அதுவும் பள்ளிவாழ்கையில் மிக அதிகமான மதிப்பெண் எடுத்து 
உயர் கல்வி பயில தகுதி அடிப்படையில் உள்நுழையும் கீழ்தட்டு
மாணவர்களின் தற்கொலைகள் தொடருவது... அதிகமாக prestigious institutions
like IITs, NITs,IISCS....நடந்துகொண்டே இருக்கின்றன . நிர்வாகங்களும் அம்மாணவர்களால் அந்த உயர்கல்விநிறுவனங்களின்
தரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மாணவர்கள்   தற்கொலை  செய்து கொள்வதாகவும் அவர்களுக்கு    தனிவகுப்புகள்  நடத்த நடவடிக்கை  எடுக்கப்போவதாகவும் சொல்லி  அந்த கதைகளுக்கு  முற்றுப்புள்ளி  வைத்துவிடுகின்றனர். தற்கொலைகள்  தொடர்ந்த வண்ணமே உள்ளன.

உண்மையில் இம்மாணவர்கள் தமிழ்வழி கல்வி பயின்று, பின் ஆங்கில வழி கல்வி முறைக்கு ஈடு தர முடியவில்லையா? அல்லது... இக்கல்வி நிறுவனங்களின் தரத்திற்கு அவர்களால் ஈடு கொடுக்க இயலாமல், கோழையாக இந்த முடிவுக்கு செல்கிறார்களா 
என்பது ஆய்வு செய்யவேண்டிய ஒன்று.

இன்னொரு  முக்கிய கோணமும் இதற்கு உண்டு , அது   தாழ்த்தப்பட்ட,  பழங்குடி மாணவர்கள் மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட 
மாணவர்கள் இந்த உயர்கல்விகூடங்களில் அனுபவிக்கும் தீண்டாமை 
கொடுமைகள்.

அந்த இரும்பு திரை விளக்கினால் அதில் எரிக்கப்பட்ட மாணவர்களின் 
கனவுகள்,  தீண்டாமையின் கோரப்பிடியில் சிதைந்தது தெரியும். நான் சொல்வது அனுமானத்தின் அடிப்படையில் இல்லை.  உயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும்,
பிராமண சமூகத்தை சேர்ந்த சென்னை  IIT யின் கணித பேராசிரியையே , தனது மாணவர்களுக்காக ( தாழ்த்தப்பட்ட சாதி) முனைவர்  பட்டத்திற்கான தேர்வில் நடக்கும் இந்த தீண்டாமையின் கோரத்தை  எதிர்த்து போராடினார் , கடைசியில் வேறு வழி இன்றி  நாளிதழ்கள் மூலம் இக்கல்வி நிறுவனங்களில் நடக்கும் இந்த கொடுமைகளை அம்பலப்படுத்தினார்.தனது மாணவர்கள் அறிவில் தகுதியானவர்களாக
இருந்தும் MADRAS IIT அவர்களுக்கு சாதியின் காரணமாக தேர்வு செய்யாமல் அவர்களுக்கு முனைவர் பட்டம் தர காலம் கடத்துவதும், தேர்வு செய்ய மறுப்பதும் குறித்து தைரியமாக வெளியில் பேசினார். இது அவர்  பிராமண சாதி  என்பதால் வேறுவழியின்றி அவருக்கு அதில் சாதீய நோக்கம் ஏதும் இல்லை
என்பதால் இந்த  உண்மை  பட்டவர்த்தனமாய் தெரிய வந்தது. ஏனெனில் பெரும்பாலும் இட ஒதுக்கீட்டின்  அடிப்படையில் செல்லும் மாணவர்களுக்கு MERIT இல்லை என்ற பாட்டை பாடி அவர்களது தகுதியை, திறமையை மூட இந்த
இடஒதுகீடிற்கு எதிரான கும்பலுக்கு எளிதாக இருக்கும்.

இன்னொரு அனுபவம் .... எனது கல்லூரியில் நடந்ததது. என் சக வருட மாணவ நண்பன் பைத்தியமாக வெளியில் தள்ளப்பட்ட கொடுமை இன்னும் மாறாத ரணமாய் இருக்கிறது 
மனசுக்குள். கணணி பொறியியலில் பெரிய கண்டுபிடிப்புகள் அவனால் நடந்திருக்கலாம் , ஆனால் உயர்சாதி வகுப்பின் 
ஆதிக்கத்தில் இருந்த நிர்வாகம்  மற்றும்  ஆசிரியர்கள்  அம்மாணவனது சுயமரியாதையை  சீண்டி, கடைசியில் பொறியியலில் அவன் வாங்கும் மதிப்பெண்களும் அவனது அசாத்திய திறமைகளையும்
மதிப்பிடப்படாமல்,ஆங்கிலம் பேச வரவில்லை என்ற கேலிக்கு, வகுப்பிலும் 
ஆளாக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவனது நம்பிக்கையை சீர்குலைத்து, கடைசியில் முதல் வருட ஆங்கில பாடத்தில் தேர்வு பெறவில்லை என 
காரணம் காட்டி மற்ற பாடங்களில் முதன்மையில் இருந்த மாணவனை YEAR BACK SYSTEM என்ற அஸ்திவாரம் கொண்டு வீழ்த்தி, அவனது கிராமத்து பெற்றோர்கள் கண்ணீர் வழிய அவனை பைத்தியமாக
அவர்களது  கிராமத்திற்கு அழைத்து சென்றது கொடுமையாக இருந்தது. அந்த மாணவன் பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரியில்
சேர்ந்த மாணவன். அவனது அறிவு மற்றும் திறனை பார்த்த எங்களது கல்லூரியின்  LAN Coordinator அவனை எல்லா lab ளையும் எல்லா systems operate பண்ண அனுமதித்திருந்தார.
ஆனால் academic staffs அவனது சாதி , அவனது ஏழை பின்னணி , தமிழ் வழி கல்வி  ஆகியவற்றை மட்டுமே குறையாக  பார்த்து...திறமையான மாணவனின் மனசை காயப்படுத்தி கொலைசெய்தனர் 
என்றே சொல்வேன்.
இவர்களது இளகிய மனசு, போராட்டத்தை எதிர் கொள்ள முடியாமல் இப்படி 
தற்கொலை செய்வது சரியான வழி இல்லை என்றாலும்....  ஆளுமை இல்லாமல் வாழ்கையின் அடித்தளத்தில் இருந்து முன்னேற 
நினைக்கும் அவர்களது  கனவுகளை  சிதைக்கும் நவீன துரோனாச்சார்யர்களான இந்த அமைப்பிற்கு, 
யார் தண்டனை தருவது?

  


Sunday, April 15, 2012

1932 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட "இனப் பிரதிநிதித்துவம் " பூனா ஒப்பந்தந்தில் பறிபோனதில் தாழ்த்தப்பட்டவர்கள் இழந்தது என்ன?

- communal award ( இனப் பிரதிநிதித்துவம் )  என்றால் என்ன ?

பொது தொகுதிகளில் வாக்களிக்கும் உரிமையோடு தாழ்த்தப்பட்டோர் தனித்தொகுதி உரிமையையும் பெற்றனர். அதாவது ஒரு மாகாணத்தில் (  மாநிலத்தில் ) சில தொகுதிகளில் ( சட்டசபை மற்றும் மக்களவை) தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களோடு , அத்தொகுதிகளில் தழ்த்தப்படோருக்காக தாழ்த்தப்பட்டோர் மட்டும் வாக்களித்து ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினரையும் தேர்ந்தெடுப்பார்கள். இந்த இரட்டை வாக்குரிமையே தாழ்த்தப்பட்டோருக்கு அள்ளிக்கப்பட சிறப்புரிமை ஆகும்.

இந்த இரட்டை வாக்குரிமை பற்றி அம்பேத்கர் கூறியது -

" இனப் பிரதிநிதித்துவத் தீர்வினால் அளிக்கப்பட்ட இரண்டாவது வாக்குரிமை என்பது விலைமதிப்பற்றதொரு சலுகை. ஒரு அரசியல் ஆயுதம் என்கிற முறையில் பார்க்கும்போது அதன் மதிப்பு கணிப்பிற்கு அப்பாற்ப்பட்டது "

இதை ஏன் இந்து மகாசபையும் சாதிய இந்துக்களும் எதிர்த்தனர்?
இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இனப்பிரதிநிதுத்துவதை இந்து மகாசபையும் சாதிய இந்துக்களும் மகாத்மா காந்திஅடிகளும் எதிர்த்தனர்.
மகாத்மா சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து , "பூனா  ஒப்பந்தத்தை" நிற்பபந்தித்து , தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையும், அம்பேத்காரையும் நேர்மையற்ற முறையில் இனப்பிரதி நிதித்துவத்தை கைவிட செய்தார். அதற்கு பதிலாக தனித்தொகுதிகள் எண்ணிக்கை மிகைபடுத்தப்பட்டன.
ஆனால் 1937  இல் நடைபெற்ற தேர்தலில் தாழ்த்தப்படவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 151  இடங்களில் , 78  இடங்களை காங்கிரசு கைப்பற்றியது.
ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு, காங்கரஸ் திட்டங்களை ஏற்றுக்கொள்வதாக உறுதி கொடுத்த வேட்பாளர்களை... கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதுதவம் எதுவும் இல்லாமல்  (தனித்தியங்கும் சக்தியை பறித்துக்கொண்டு) தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பிரதிநிதிகள் தேர்வாயினர்.

இன்றும் தனிதொகுதியின் பிரதிநிதிகள், தேசிய அல்லது மாநில கட்சிகளின் கைப்பாவையாக, அவர்களது தொகுதியில் நடக்கும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகளுக்கேதிராக எதுவும் செய்யமுடியாமல் கட்சியரசியலில் கரைந்து போனதற்கு, காரணம் உண்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அவர்களது பங்களிப்பினை அளிக்கும் உரிமையான "இனப்பிரதிநிதுத்துவதை" இழந்ததே காரணம். தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் உரிமையை தட்டிப்பரித்ததில் காந்தியின் பங்கு அதிகம்.

 




  

Thursday, March 29, 2012

பாசாங்கற்ற, வலிந்து மேற்கொள்ளாத,இயல்பான எந்த நட்பும், எந்த காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். எல்லா மனிதனும், எல்லா மனுஷியும் அழகாக இருக்கும்போது இந்த வாழ்வும், இந்த உலகும் மேலும் அழகுறும்.

- வண்ணதாசன்.


சமீபத்தில் வண்ணதாசனின் "உயரப்பறத்தல்" சிறுகதை தொகுப்பை படித்து முடித்தேன். உணர்வுகளை உயிரோட்டத்தோடு கதையில் உலவவிட்டிருக்கும் அழகு... மனசை கரைத்து... ஒவ்வொரு கதையிலும்... நம்மைக்  கண்டுகொள்ள முடிந்ததது... ஒரு இனிய அனுபவம். மொத்தத்தில் எனக்குள் என்னை புதுப்பித்து. உணர்வுகளில் எந்த கசப்பும் இல்லாமல்... கதை மாந்தர்கள் மட்டுமல்ல, அவரின் சிறுகதைகள் பயணிக்கும் தளமும் அதில் வாழும் உயிரற்ற உடமைகளும்... உணர்வுகளோடு உயிர்ப்போடு உலவுகையில் தோன்றியது... அடடா இத்தனை  அழகான உலகத்தில், இத்தனை அழகான மனிதர்களுடன்... நான் வாழும் வாழ்க்கை எத்தனை சுகமானது என்று.

உயர பறக்கும் அனுபவத்தை.... முக நூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது.

Tuesday, March 13, 2012





என்ன கிடைத்தது?

சுற்றியடித்த சூறாவளியால்
வேரறுந்து.
வீழ்ந்தப்பின்..
படிமமாக சித்தமானேன்,
பாறையாய்... இறுகி
சலனமின்றி
சாய்ந்திருந்த வேளையில்...
சத்தமின்றி
உள்நுழைந்தாய்,
விரிசல்களாய் உடைகின்றன,
இறுகிய என் சுவர்கள்,
சிதைந்து நொறுங்கியது..
என் சமாதி,
உயிரற்ற உடைமையை,
அசைத்து உடைத்து போட்டதில்
என்ன கிடைத்தது உனக்கு?